17-11-2020-அன்று நடைபெற்ற 342-வது கூட்டம்

17-11-2020-அன்று நடைபெற்ற 342-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.11.2020 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 342-வது கூட்டம் இணைய வழி மூலம்
17.11.2020-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பளராக இந்த நிகழ்ச்சியை இணைய வழி மூலம் ஏற்பாடு செய்த அரிமா
முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி அனைவரையும்
வரவேற்றார். கவிஞர் முனைவர் பேராசிரியர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள்
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு சங்கப் புலவர்களின் மாண்பு என்னும் தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு சொற்பொழிவாளர் ஆற்றிய உரை : சங்ககால இலக்கியங்களில் எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு, பதிணென் கீழ்க்கணக்கு ஆகிய நூல்கள் அடங்கும். இவற்றைப் பாடிய
புலவர்களில் பெண்பால் புலவர்களும், சில மன்னர்களும் அடங்குவர். இப் புலவர்கள்
அக்காலச் சமுதாய வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டும் கண்ணாடியாக விளங்கினர்.
தம் குடும்பம் வறிய நிலையில் இருந்தாலும், தரம் தாழாது நுண்மான் நுழைபுலம்
மிக்கவராக விளங்கினர். ஆற்றுப்படை நூல் பாடிய புலவர்கள் தாம் பெற்ற செல்வம்
பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு செல்வம் பெறாதவர்களை
செல்வச் செழிப்போடு விளங்கும் மன்னர்களிடம் ஆற்றுப்படுத்தும் குணம்
கொண்டவர்களாக விளங்கினர். சங்கப் புலவர்கள் பல நீதி நூல்கள் மூலமாக மக்களை
நல்வழிப்படுத்தி அறவாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தனர். சங்கப் புலவர்கள்,
அக்கால மக்கள் காதல் மற்றும் வீரத்தை போற்றி வாழ்ந்தனர் என்பதை பல பாடல்களில்
பாடியுள்ளனர். சங்கப் புலவர்கள் பலர் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கி நல்லாட்சி
நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் மூலம் தெரிந்து
கொள்ளலாம்.
இந் நிகழ்ச்சியை தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் சிலர் வாழ்த்தி பேசினார்கள். சிங்கப்பூர்,
மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் துபாயிலிருந்து தமிழறிஞர்கள் வாழ்த்தி
பேசினார்கள்.
பொருளாளர் நன்றி கூற இணைய வழி கூட்டம் இனிதே நிறைவடைந்தது.