16.07.2017 – 306- வது மாதாந்திரக் கூட்டம்

Photo with News - July 2017-4Photo with News - July 2017-5Photo with News - July 2017-1Photo with News - July 2017-2Photo with News - July 2017-3

16.07.2017 – 306- வது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
16.07.2017 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 306-ஆவது கூட்டம் 16.07.2017 அன்று
புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு. டோக்ரா, IPS, அவர்கள் “நானும்,
தமிழும், தமிழ்நாடும்” என்றும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பஞ்சாப்
மாநிலத்தில் பிறந்த இவர் தான் 5-ஆம் வகுப்பில் படிக்கும் போது எல்லையை
காக்க வரும் வீரர்களுக்கு இனிப்புகள் கொடுப்பதை வழக்கமாகக்
கொண்டிருந்ததை குறிப்பிட்டு, அந்த வீரர்களில் தமிழர்கள் இருந்ததை
பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார். அது முதல் தமிழ்நாட்டின் பால் ஒரு
ஈர்ப்பு வந்தது என்று குறிப்பிட்டார்.
1974-இல் எம்.ஏ. படிக்கும்போது விடுமுறைக்கு இமாச்சல பிரதேசம்
சென்றபோது ஒரு ஜோசியரைப் பார்த்த போது, அவர் அறையில் பல்வேறு
அரசியல் தலைவர்கள் படங்கள் இருப்பதைப் பார்த்து அவர்மீது நம்பிக்கை
இழந்த போது, இதனைப் புரிந்து கொண்ட அவர் உனக்கு நம்பிக்கை இல்லை,
எனவே உன் நெற்றியைப் பார்த்து பலன் சொல்வதாக கூறி, நீங்கள் சீருடைப்
பணியில் சேருவீர்கள் என்று சொன்னார். எங்கள் பகுதியில் நிறைய பேர்கள்
ராணுவத்தில் இருக்கிற காரணத்தால் நானும் அதையே எண்ணினேன். ஆனால்
தமிழ்நாட்டில் காவல்துறையில் சேர்ந்த பிறகு ஜோசியர் சொன்னதை
நம்பினேன்.
தமிழ்நாடு கேடருக்கு (cadre) என்னை ஒதுக்கியதால், தமிழ் கற்றுக் கொள்ளும்
அவசியம் ஏற்பட்டது. ஏற்கனவே பஞ்சாபி, சமஸ்கிருதம், ரஷ்யன் ஆகிய
மொழிகள் தெரிந்திருந்ததால் தமிழ் கற்பது கடினமாக இல்லை என்று
குறிப்பிட்டார். போலீஸ் பயிற்சி கல்லூரி கலை நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் பாடிய
பாட்டைப் பாடி பாராட்டுப் பெற்றேன்.
நண்பர் ஒருவர் அறிவுரைப்படி தினத்தந்தி பத்திரிகையை படித்தும்
தமிழ்மொழி புரியவில்லை என்று குறிப்பிட்டார். தமிழ், பஞ்சாப், உருது ஆகிய
மொழிகளில் நாடகங்கள் எழுதியுள்ளதாக கூறிய அவர் “சாமியாரின் மாமியார்”
என்னும் நாடக நூலைப் படித்து, பேச்சுத் தமிழில் பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடித்த பின், கடலூர் மாவட்டம் ரெட்டிச் சாவடி என்னும் ஊரில்
பணியில் சேர்ந்தார்.

பின்னர் சிவகாசியில் பதவி ஏற்றார். அப்போது வரதட்சணை கொடுமையை
எதிர்த்து பெரிதும் பேசி வந்தார். படித்தவர்கள் மத்தியில் தாக்கத்தை
ஏற்படுத்தியது. “சேலை கட்டத் தயாரா” என்று தான் எழுதிய கட்டுரையை
வெளியிடுவதற்கு தயங்கி அதை திரும்ப பெற்றுக்கொண்டார். அலங்கார
தமிழில் பேசுபவர்கள் கூட ஜோக் சொன்னால் பேசும் தமிழுக்கு வந்து
விடுவார்கள் என்றார்.
1991 தினமணியில் தனது முதல் கட்டுரை வெளி வந்ததாக குறிப்பிட்டவர்,
மதுரை அகில இந்திய வானொலியில், தமிழில் இசை அமைத்துப் பாடியுள்ளார்.
1993-ல் தமிழ் மீது தனக்குள்ள ஈர்ப்பினை பிடிக்காமல் தனது மேல் அதிகாரி
வேலையா, தமிழா இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள் என்று
தெரிவித்ததையும் குறிப்பிட்டார்.
இவரது திறமையைக் கண்டு இவரை CBI மற்றும் வர்மா கமிஷனுக்கு
மாற்றினர், முதமைச்சர் செல்வி ஜெயலலிதா இந்த ஆணையை ரத்து செய்ததை
குறிப்பிட்டார்.
சாயல் காவல் என்ற கதை ராணி இதழிலும், கலைமகள் இதழில் 12
கட்டுரைகள் மற்றும் குடும்பமே கோயில் என்ற கட்டுரைகளை எழுதியதை
பெருமையுடன் குறிப்பிட்டு அவையோரை வியப்பில் ஆழ்த்தினார்.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் தானே எழுதி இசை அமைத்துப் பாடிய
முருகனைப் பற்றிய பாடலையும், கம்பராமாயணப் பாடல்கள் ஒரு சிலவும்,
தனது கைப்பேசியில் பதிவு செய்து அவையோருக்கு ஒலிபரப்பி
உறுப்பினர்களின் ஒட்டுமொத்த பாராட்டினையும் பெற்றார். கம்பராமாயணம்
மிகச்சிறந்த நூல் என்று கூறிய அவர், அதனை 1000 பாடல்களாகச் சுருக்கி
தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
தலைவர் பேசுகையில், திரு. டோக்ரா அவர்களது தமிழ் பணியைக் குறித்து
பெருமைபட பேசி அவரை அறிமுகம் செய்தார். சென்னையில் இயங்கி வரும்
செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூருக்கு மாற்றக் கூடாது என்று
தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றியதை அவையோருக்குத்
தெரிவித்தார்.
பட்டாபிராம் இந்துக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்
ஜா. திரிபுரசூடாமணி அவர்களது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி,
“சிற்றிலக்கியச் செல்வி” என்னும் விருதினை வழங்கனிார்.
காமராஜர் பிறந்தநாள் குறித்து சொற்பொழிவு ஆற்றிய அமுதா மெட்ரிக் பள்ளி
11-ஆம் வகுப்பு மாணவிக்கு நூல் பரிசளிக்கப்பட்டது.
முன்னதாக செயலாளர் அரிமாதுரை. சுந்தரராசன் வரவேற்பு உரையாற்றினார்.
பொருளாளர்தி. ரங்கராஜன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.