31-01-2022-அன்று நடைபெற்ற 370-வது கூட்டம்

31-01-2022-அன்று நடைபெற்ற 370-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
31.01.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 370-ஆவது காணொலிக் கூட்டம் 31.01.2022
ஞாயிறு மாலை 5.00 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையும், தலைமை உரையும்
ஆற்றினார்.
செயலாளர் தம் உரையில் திருவாளர்கள் கா. வேழவேந்தன், வி.த.
கிருஷ்ணமூர்த்தி, பெ. சண்முக சுந்தரம், இரா. மணி (நிழற்படக் கலைஞர்) ஆகியோர்
மறைவு குறித்து தெரிவித்தார். அவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரா.
பு.பெ. இராமசாமி இன்று மகாத்மா காந்தி நினைவு நாளை ஒட்டி மௌனவிரதம்
மேற் கொண்டதால் அவரால் நடத்தப்படும் “கண்டு சொல் வென்று செல்” என்னும்
நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து
தொடக்க உரை ஆற்றி சிறப்புரை ஆற்றிய டாக்டர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
அவர்களை அறிமுகம் செய்து அவர் குறித்த விவரங்களை தெரிவித்தார்.
டாக்டர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் எழுத்தாளர், லண்டன் குழந்தைகள் நல
அதிகாரி (ஓய்வு) “பிரித்தானியாவில் தமிழர்களின் வரலாறும், வாழ்க்கை
மாற்றங்களும்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஆற்றிய உரையில் சில பகுதிகள்:
பிரித்தானியா 4 நாடுகளைக் கொண்டது, இங்கு 195 நாடுகளில் இருந்து மக்கள்
வந்துள்ளனர். 330 மொழிகள் பேசும் நாடு. பல கலாச்சார சமுதாய நிலைகளைக்
கொண்டவர்களாக இருந்தாலும் பண்பாட்டைக் காத்து வருகின்றனர். சீன மக்கள்
அதிக அளவில் பாதுகாப்பு கோரி இங்கு வந்துள்ளனர். இலங்கைத் தமிழர்கள்
வருகையும் உண்டு, இந்தியாவில் இருந்து 5% வந்துள்ளனர். இங்கு கலப்புத்
திருமணம் அதிக அளவில் நடைபெற்றாலும் பரந்து பட்ட மனம் கொண்டவர்களாக
உள்ளனர். இங்கு 240 பள்ளிகள் உள்ளன. டாக்டர் சண்முக சுந்தரம் அவர்களால்
“லண்டன் முரசு” என்னும் முதல் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டு
வருவதோடு தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இலங்கைத் தமிழர் சிவானந்தன் பத்திரிக்கை மூலமாக சைவ சமய நெறிகளைப் பரப்புவதோடு சபாபதி
பிள்ளை மற்றும் சதானந்தன் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர்.
இங்கு முருக வழிபாடு அதிகம். லண்டன் மாநகரில் முதலாவது பெரிய கோயில்
கட்டப்பட்டுள்ளது. மேலும் 40 கோயில்கள் உள்ளன.
இங்கு தமிழர்களுக்கு என்று தகவல் நிலையம் உள்ளது. இங்கு தமிழர்கள்
வரவால் தமிழ் வளர்ச்சி பெற்று வருகிறது. இலங்கைத் தமிழர்களால்
தொலைக்காட்சியும், பண்பலைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு, சேரலாதன், கவிஞர் ந. பாபு, நடராஜா
சச்சிதானந்தம், பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ வன்னிய பெருமாள்,
து.செ. இராமலிங்கம், கோ. ஞானப்பிரகாசம், ச. கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புச்
சொற்பொழிவாளரை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினர்.
டாக்டர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.