
18-04-2021-அன்று நடைபெற்ற 348-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.04.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 348-வது கூட்டம் இணைய வழி மூலம்
18.04.2021-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் திரு. துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் தொடக்க உரை
ஆற்றினார்.
இலக்கியச் சோலை இதழின் ஆசிரியர், சோலை தமிழினியன் இலக்கியச் சோலை
இதழின் அண்ணாநகர் சிறப்பிதழை வெளியிட்டு அறிமுக உரை ஆற்றினார். அதனைத்
தொடர்ந்து கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் செயலாளர் தமிழருவி கோவை.
கோகுலன், ஆரணி வட்டத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் காந்தீய கவிநிலா டாக்டர்
க. பரமசிவம், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் நெருப்பலைப் பாவலர் இராம.
இளங்கோவன் ஆகியோர் அண்ணாநகர் சிறப்பிதழ் வெளியிட்டது குறித்து பாராட்டியும்
வாழ்த்தியும் பேசினர்.
அடுத்த நிகழ்வாக சித்திரைத் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் இலக்கிய
மாமணி பேரா. முனைவர் க. ரேவதி, சித்திரையும் தமிழர் பண்பாடும் குறித்து சிறப்புச்
சொற்பொழிவு ஆற்றினார். தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பருவநிலை
காலங்களை பகுத்தறிந்து அறிவியல் நுணுக்கமும் ஆழங்கால் பட்டவர்களாகவும்,
அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கினர் என்பதை பல இலக்கியச் சான்றுகளுடன்
உரையாற்றினார். பண்டைத் தமிழர்கள் கிழமை, கோள்களின் ஆதிக்கம்
போன்றவைகளை நன்கு உணர்ந்தவர்களாகவும் அதற்கேற்றவாறு தம் வாழ்க்கையை
நுண்மான் நுழைபுலத்தோடு வாழ்ந்து காட்டினார் என்பதையும் விளக்கிக் கூறினார.
சித்திரைத் திருநாள் கொண்டாட்டங்களின் வெளிப்பாடு சிலப்பதிகாரம், மணிமேகலை
போன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதையும் தம் உரையில் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக சித்திரைத் திருவிழா தமிழர் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து இருந்ததை
இலக்கியச் சான்றுகளுடன் கூறி தம் உரையை நிறைவு செய்தார். இன்று நடைபெற்ற
நிகழ்ச்சிகளை பலர் பாராட்டிப் பேசினர். இறுதியாக பொருளாளர் நன்றி கூற
இணையவழி கூட்டம் இனிதே நிறைவுற்றது.
