அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 15.10.2017 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 309-ஆவது கூட்டம் 15.10.2017 அன்று புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறைத் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “வள்ளலாரின் சமுதாய சிந்தனைகள்” என்னும் தலைப்பில் சிறந்ததொரு உரையாற்றினார். வள்ளலாரின் பல்வேறு பரிணாமங்களை தெளிவாக எடுத்துரைத்தார். காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற அறிஞர்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டி அவையோரை தன்வயப்படுத்தினார். அன்புக்கும் கருணைக்கும் சாட்சியாக வாழ்ந்தவர் வள்ளலார் என்று புகழாரம் சூட்டினார். தலைவர் புலவர் த. இராமலிங்கம் பேசுகையில் வள்ளலார் குறித்த பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். அவரது கொள்கைகளான பசியாற்றுதல், மரணமில்லா பெருவாழ்வு போன்றவற்றை விரிவான தெளிவுபடுத்தினார். பசித்திரு. தனித்திரு, விழித்திரு இவற்றிற்கு தக்க விளக்கம் முறையில்
அளித்தார். முன்னதாக அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி நிஷாந்தினி வள்ளலார் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். செயலாளர் துரை. சுந்தரராசன் பொன்னாடை அணிவிக்க துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் பு.பெ. இராமசாமி ஆகியோர் நூல்களை வழங்கினர். அக்டோபர் மாதம் பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். முனைவர் பு.பெ. இராமசாமி வினா-விடை நடத்தி பரிசு வழங்கினார். செயலாளர் நன்றி கூறும் போது கல்லூரிக்கு புதிததாக நியமிக்கப்பட்ட முதல்வர் டாக்டர் கே. தங்கவேலு அவர்களை தலைவருடன் நேரில் சந்தித்தது குறித்தும், சங்கத்தின் கூட்டம் குறித்தும் விவாதித்ததை குறிப்பிட்டபோது, தமிழ் வளர்ச்சிக்கும், நமது சங்க வளர்ச்சிக்கான அத்துணை உதவிகளை செய்ய உறுதி அளித்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 20-ஆவது பொதுக்குழு கூட்டம் 17.09.2017 அன்று நடைபெற்றது
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 20-ஆவது பொதுக்குழு கூட்டம் 17.09.2017 அன்று நடைபெற்றது. தலைவர் புலவர் த. இராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். 2017 – 2018 (31.03.2017 முடிய) ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை செயலாளரால் அவைக்கு அளிக்கப்பட்டு, இ. தர்மன் முன்மொழிய புலவர் தங்க. ஆறுமுகன் வழிமொழிய, பொதுக்குழுவார் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொருளாளரால் அளிக்கப்பட்ட 31.03.2017 முடிய தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு மற்றும் ஐந்தொகைக் கணக்குகளை வி. நாகசுந்தரம் முன்மொழிய, கோ. ஞானப்பிரகாசம் வழிமொழிய ஆண்டு கணக்குகள் பொதுக்குழுவால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2017-2018 ஆண்டுக்கான தணிக்கையாளராக தற்போதைய தணிக்கையாளர் திரு. சரத்குமார் அவர்களை மீண்டும் நியமிப்பது என்றும் அவரது ஆண்டு ஊதியம் ரூபாய் 1,500 -லிருந்து ரூபாய் 2000-ஆக உயர்த்த பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. இ. தர்மன் முன்மொழிய சி. செயபால் வழிமொழிய தீர்மானம் நிறைவேறியது. தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்த திரு. சேதுபாஸ்கரா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு. சேது குமணன் அவர்களுக்கு பொதுக்குழு நன்றி தெரிவித்தது. பின்னர் சில கலந்துரையாடலுக்குப் பின்னர், பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூற பொதுக்குழுக் கூட்டம் நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.08.2017 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 307-ஆவது கூட்டம் 20.08.2017 அன்று புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற இந்து ஒற்றுமைக் கழக மேல் நிலைப் பள்ளி தமிழாசிரியர் கோ. அண்ணாதுரை அவர்கள் “விடுதலை வேட்கையில் தமிழ்க் கவிஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் விள்ளை, நாமக்கல் கவிஞர் ஆகியவர்கள் நாடு விடுதலைக்காக பாடுபட்டதை அவரவர்கள் எழுதிய எழுச்சிக் கவிதைகள் குறித்தும் அவை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இசையுடன் பாடி அவையோரை தன்வயப்படுத்தினார். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாடு இருத்தல் வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியதை நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் இன்றைக்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இல்லை என்பதை வருத்ததோடு குறிப்பிட்டார். தலைவர் பேசும் போது பாரதி, பாரதிதாசன், மேலும் பல கவிஞர்கள் எழுதிய கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை எனக் குறிப்பிட்ட அவர் வீடுகளில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கப்படுவதில்லை என்பது வருத்தமாக உள்ளது எனக் குறிப்பிட்டார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர் ஆகஸ்ட் மாதம் பிறந்த நாள் கண்ட உறுப்பினர்களை வாழ்த்தினார். அண்ணாநகர் நலச்சங்கத்தின் சார்பில், துணைத்தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு, “பன்முக சாதனையாளர்” விருது வழங்கியதை பாராட்டி தமிழ்ச்சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பிரஷாந்தி குருகுலம் மற்றும் திருவள்ளுவர் மிஷன் இணைந்து சி. பாலுசாமி அவர்களது திருக்குறள் சேவையைப் பாராட்டி, “திருக்குறள் மாமணி” விருது பெற்றமைக்கு பாராட்டு தெவிக்கப்பட்டது. மருத்துவத் துறையில் மருத்துவ சிகிச்சை அறுவை அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு 42 ஆயிரம் ஒளிப்படங்களை எடுத்து சாதனை புரிந்தததை இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டதைப் பாராட்டி நமது சங்க உறுப்பினர் டி.எஸ்.கே. கரண் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் புதிதாக உறுப்பினராக சேர்ந்த திரு. வளன் அரசு அவர்கள், தலைவர் வேண்டுகோளை ஏற்று, சில மணித்துளிகள் திருக்குறள் குறித்து சிறப்பாகப் பேசினார். முனைவர் பு.பெ. இராமசாமி வினா-விடை நிகழ்ச்சித் தொடர்ந்து, பொருளாளர் தி. ரங்கராஜன் கூறுகையில் புதிய உறுப்பினர்கள் 3 பேர்களை அறிமுகம் செய்த பேரா. திருக்குறள் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி கூறினார். கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 16.07.2017 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 306-ஆவது கூட்டம் 16.07.2017 அன்று புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு. டோக்ரா, IPS, அவர்கள் “நானும், தமிழும், தமிழ்நாடும்” என்றும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர் தான் 5-ஆம் வகுப்பில் படிக்கும் போது எல்லையை காக்க வரும் வீரர்களுக்கு இனிப்புகள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததை குறிப்பிட்டு, அந்த வீரர்களில் தமிழர்கள் இருந்ததை பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார். அது முதல் தமிழ்நாட்டின் பால் ஒரு ஈர்ப்பு வந்தது என்று குறிப்பிட்டார். 1974-இல் எம்.ஏ. படிக்கும்போது விடுமுறைக்கு இமாச்சல பிரதேசம் சென்றபோது ஒரு ஜோசியரைப் பார்த்த போது, அவர் அறையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் படங்கள் இருப்பதைப் பார்த்து அவர்மீது நம்பிக்கை இழந்த போது, இதனைப் புரிந்து கொண்ட அவர் உனக்கு நம்பிக்கை இல்லை, எனவே உன் நெற்றியைப் பார்த்து பலன் சொல்வதாக கூறி, நீங்கள் சீருடைப் பணியில் சேருவீர்கள் என்று சொன்னார். எங்கள் பகுதியில் நிறைய பேர்கள் ராணுவத்தில் இருக்கிற காரணத்தால் நானும் அதையே எண்ணினேன். ஆனால் தமிழ்நாட்டில் காவல்துறையில் சேர்ந்த பிறகு ஜோசியர் சொன்னதை நம்பினேன். தமிழ்நாடு கேடருக்கு (cadre) என்னை ஒதுக்கியதால், தமிழ் கற்றுக் கொள்ளும் அவசியம் ஏற்பட்டது. ஏற்கனவே பஞ்சாபி, சமஸ்கிருதம், ரஷ்யன் ஆகிய மொழிகள் தெரிந்திருந்ததால் தமிழ் கற்பது கடினமாக இல்லை என்று குறிப்பிட்டார். போலீஸ் பயிற்சி கல்லூரி கலை நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் பாடிய பாட்டைப் பாடி பாராட்டுப் பெற்றேன். நண்பர் ஒருவர் அறிவுரைப்படி தினத்தந்தி பத்திரிகையை படித்தும் தமிழ்மொழி புரியவில்லை என்று குறிப்பிட்டார். தமிழ், பஞ்சாப், உருது ஆகிய மொழிகளில் நாடகங்கள் எழுதியுள்ளதாக கூறிய அவர் “சாமியாரின் மாமியார்” என்னும் நாடக நூலைப் படித்து, பேச்சுத் தமிழில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்த பின், கடலூர் மாவட்டம் ரெட்டிச் சாவடி என்னும் ஊரில் பணியில் சேர்ந்தார்.
பின்னர் சிவகாசியில் பதவி ஏற்றார். அப்போது வரதட்சணை கொடுமையை எதிர்த்து பெரிதும் பேசி வந்தார். படித்தவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. “சேலை கட்டத் தயாரா” என்று தான் எழுதிய கட்டுரையை வெளியிடுவதற்கு தயங்கி அதை திரும்ப பெற்றுக்கொண்டார். அலங்கார தமிழில் பேசுபவர்கள் கூட ஜோக் சொன்னால் பேசும் தமிழுக்கு வந்து விடுவார்கள் என்றார். 1991 தினமணியில் தனது முதல் கட்டுரை வெளி வந்ததாக குறிப்பிட்டவர், மதுரை அகில இந்திய வானொலியில், தமிழில் இசை அமைத்துப் பாடியுள்ளார். 1993-ல் தமிழ் மீது தனக்குள்ள ஈர்ப்பினை பிடிக்காமல் தனது மேல் அதிகாரி வேலையா, தமிழா இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள் என்று தெரிவித்ததையும் குறிப்பிட்டார். இவரது திறமையைக் கண்டு இவரை CBI மற்றும் வர்மா கமிஷனுக்கு மாற்றினர், முதமைச்சர் செல்வி ஜெயலலிதா இந்த ஆணையை ரத்து செய்ததை குறிப்பிட்டார். சாயல் காவல் என்ற கதை ராணி இதழிலும், கலைமகள் இதழில் 12 கட்டுரைகள் மற்றும் குடும்பமே கோயில் என்ற கட்டுரைகளை எழுதியதை பெருமையுடன் குறிப்பிட்டு அவையோரை வியப்பில் ஆழ்த்தினார். அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் தானே எழுதி இசை அமைத்துப் பாடிய முருகனைப் பற்றிய பாடலையும், கம்பராமாயணப் பாடல்கள் ஒரு சிலவும், தனது கைப்பேசியில் பதிவு செய்து அவையோருக்கு ஒலிபரப்பி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த பாராட்டினையும் பெற்றார். கம்பராமாயணம் மிகச்சிறந்த நூல் என்று கூறிய அவர், அதனை 1000 பாடல்களாகச் சுருக்கி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். தலைவர் பேசுகையில், திரு. டோக்ரா அவர்களது தமிழ் பணியைக் குறித்து பெருமைபட பேசி அவரை அறிமுகம் செய்தார். சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூருக்கு மாற்றக் கூடாது என்று தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றியதை அவையோருக்குத் தெரிவித்தார். பட்டாபிராம் இந்துக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஜா. திரிபுரசூடாமணி அவர்களது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, “சிற்றிலக்கியச் செல்வி” என்னும் விருதினை வழங்கனிார். காமராஜர் பிறந்தநாள் குறித்து சொற்பொழிவு ஆற்றிய அமுதா மெட்ரிக் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவிக்கு நூல் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக செயலாளர் அரிமாதுரை. சுந்தரராசன் வரவேற்பு உரையாற்றினார். பொருளாளர்தி. ரங்கராஜன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 18.06.2017 அன்று நடைபெற்ற ‘முப்பெரும் விழா”
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 32-ஆவது ஆண்டு விழா, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் திருவாளர்கள் அன்புப்பழம் நீ, பி.கே. சிங்கார அரங்கம், நெ.ஆ. பூபதி ஆகியோருக்கு விருதும், பொற்கிழியும் வழங்கல், அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கல் ஆகிய ‘முப்பெரும் விழா’க்கள் 18.06.2017 அன்று, தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்புரை ஆற்றிய முன்னாள் அரசுச் செயலாளர் திரு. கி. தனவேல், இ.ஆ.ப. அவரகள், தமிழ்மொழி குறித்த பல்வேறு விளக்கங்களை அளித்தார். தமிழ் தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் நடைபெறும் கீழடி அகழ்வாய்வு மூலம் தெரியவருவதாகவும், இதற்கு வலு சேர்க்கும் வகையில் சங்க இலக்கியங்களை ஆதாராமாக உள்ளதையும் சுட்டிக் காட்டினார். மேலும் பேசுகையில், தமிழ்ப் பாடத்தில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் பெறுவதால், பல மாணவர்கள் சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற பாடங்களை தேர்வு செய்வதாக கூறி இதனைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர்கள் தமிழ்ப்பாடத்திற்கு மதிப்பெண் அளிக்கும் போது சலுகை காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தற்போது நடைபெறும் தமிழ்ச்சங்க கூட்டங்களுக்கு பெரும்பாலும் முதியவர்களே வருவதாகவும், இளைஞர்கள் வருவதில்லை என்று குறிப்பிட்டு வருங்காலத்தில் தமிழ்மொழியின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டார். பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து பேசிய முனைவர் சேதுகுமணன் பேசியபோது தமிழ்மொழியின் சிறப்பு குறித்து சிலாகித்து பேசினார். அண்ணாநகர் தமிழ்ச்சங்கம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக அறிவித்தார். தலைவர் பேசுகையில் தமிழ்ச்சங்கம் ஆற்றி வரும் பணிகளைக் குறித்து விரிவாக எடுத்துத்தார் தமிழ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் கஞ்சத்தனம் பார்ப்பது இல்லை எனவும், அரசின் வழிகாட்டுதலின் பேரில்தான் வினாத்தாள்கள் திருத்தப்படுவதாகவும் விளக்கினார், முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றனார். பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூறினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21.05.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 305-ஆவது மாதாந்திரக் கூட்டம் 21.05.2017 அன்று சங்கத் தலைவர் முனைவர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி மேனாள் முதல்வர் திரு. சு.வஜ்ரவேலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘திரு.வி.கவும், சமுதாய நலனும்’ என்னும் பொருள் பற்றி சிறப்புரை ஆற்றினார் அவர் பேசுகையில், திரு.வி.க. வின் வாழ்க்கை வரலாறு, அவரது கொள்கைகள் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் பல்வேறு தலைப்புகளில் கூறினார். 12 தொழிற்சங்கங்களை உருவாக்கி, அவற்றின் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு காந்தியவாதியாகவும் திகழ்ந்தார். விதவைத் திருமணத்தை ஆதரித்தார்’. பெண்களுக்கு பொட்டு கட்டி விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவத்தார். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக விளங்கனிர். இவருக்குப் பின்னர் அறிஞர் அவர்கள் இவரது வாரிசாக விளங்கினார். உலக அளவில் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், தமிழ்மொழியில் ஆற்றல் மிக்கவராகவும், மொழிப்பற்று நாட்டுப் பற்று கொண்டவராகவும், அறப்பணியில் ஈடுபாடு உள்ளவராகவும் விளங்கினார். நேர்மை, கற்புடமை, ஒழுக்கம் ஆகியவற்றில் உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்தார். இவ்வாறு 1-1/2 மணிநேரம் அவையோரை தன்வயப்படுத்தினார். துணைத் தலைவர் அவர்கள் கூறும்போது தனக்கும் அவருக்கும் உள்ள நீண்ட கால தொடர்பு குறித்து தமிழ் எழுத்தாளர் சங்க சார்பில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் தனக்கென முத்திரை பதிப்பவர் என்று பெருமையோடு கூறி அண்மையில் கொல்கத்தா சென்ற போது இவரது பேச்சை கேட்டு அனைவரும் வியப்படைந்ததாக கூறினார். தமிழாசிரியர் ஒருவர் கல்லூரியில் முதல்வராக வருவது வியக்கத்தக்க செயல் என்றார். பட்டப் படிப்புக்கு பின்னர் இரண்டு டாக்டர் பட்டங்களை பெற்றது இவருடைய திறமைக்குச் சான்று எனக் கூறினார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர், திரு.வி .. க அவரகள் முதல் முதலாக திரு. சக்கரை செட்டியாருடன் இணைந்து தொழிற்சங்கத்தை துவக்கினார் என்று கூறி B & C மில் தொழிற்சங்கத்திற்கு தலைவராக இருந்தார். எளிமையான தலைவராக இருந்தார். காரல்மார்க்ஸ் தத்துவத்தை பின்பற்றியதோடு, காந்தியையும் வள்ளுவத்தையும் இரு கண்களாகப் பாவித்தார். மத நல்லிக்கணத்திற்காகப் பாடுபட்டார். தந்தை பெரியாரோடு இணைந்து பணியாற்றி பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார். கண்பார்வை இழந்தி நிலையில் படுக்கையில பிதற்றல், முதுமையில உளறல் என்னும் நூல்களை, இவர் சொல்ல டாக்டர் மு.வ. அவர்களும், அன்பு கணபதி அவர்களும் எழுதினர். மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை விளக்கம், முருகன் அல்லது அழகு என்ற நூல்களையும் எழுதியுள்ளார். அரசியல்வாதியாக தொழிலாளர் தோழனாக, பத்திரிகையாளனாக, பதிப்பாளராக ஒரு பன்முக அறிஞராக விளங்கினார் என்று கூறி அனவைரையும் வரவேற்றார். பின்னர் மே மாதம் பிறந்த நாள் கண்டவர்கள் பெருமைப் படுத்தபட்டார்கள். தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளோடு இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திரு. மணி அவர்கள் தனது 60 வயது நிறைவடைந்த நிலையில் அவரைப் பாராட்டும் முகத்தான் அவருக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து மடலோடு ரூபாய் ஐயாயிரம் ரொக்கமாக சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நன்றியுரை ஆற்றிய பொருளாளர் ரங்கராஜன் சங்கத்திற்கு திரு. மணி ஆற்றிவரும் பணிகளை எடுத்துக் கூறினார். திருமதி பாரததேவி அவர்களது மகன் திருமண அழைப்பிதழ் பெற்ற அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஜூன் திங்கள் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.04.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 304-ஆவது மாதாந்திரக் கூட்டம் 20.04.2017 அன்று அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தன் சார்பில் மூத்த எழுத்தாளரும், சென்னை கம்பன் கழக செயலாளருமான “இலக்கிய வீதி” இனியவன் அவர்களுடைய “பவழவிழா”வாக சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இனியவன் அவர்களது இலக்கிய வீதி, பத்திரிகையை தொடங்கி வைத்ததே தான் என்றும் அவர் நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளிலும் தான் கலந்து கொண்டதை குறிப்பிட்டார். அவரது பல்வேறு பண்புகளை குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார். தலைவர் பேசுகையில் இனியவன் அவர்கள் தனக்கு முக்கியத்துவம் தராமல் தமிழுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் தன்மை உடையவர் என்று பெருமைபட கூறினார். வாழ்த்துரை வழங்கிய “புதுகைத் தென்றல்” ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் பேசும் போது இனியவனுக்கும் தனக்கும் உள்ள நீண்ட கால நட்பைக் குறித்து குறிப்பிட்டார். இலக்கியவீதி தொடங்கியபோது அவர் சந்தித்த பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டார். இனியவன் அவர்கள் அமைதி, அடக்கம் முதலிய பண்புகளை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். முனைவர் மறைமலை இலக்குவனார் தமது வாழ்த்துரையில், இனியவன்-கசலட்சுமி இவர்களின் பவழவிழா, பாண்டியன் காலத்தில கபிலர் தலைமையில், ஓரி பாராட்ட நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். இனியவன் குறித்து குறிப்பிடுகையில் அவர் நமது 9-ஆவது வகுப்பில் படிக்கும்போதே, மாணவர் குரல் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இலக்குமிபதி என்னும் பெயர் இனியவன் என்று மாறியது. பள்ளியிறுதி படிக்கையில் “பெண்மனம்” கதைக்கு முதற்பரிசு. குமுதம், ஆனந்த விகடன் வாசகர்கள் இவரது கதைகளை விரும்பி படித்தனர். 1959-இல் தொடங்கி 1972-இல் 14 ஆண்டுகளில் 250 கதைகள், 17 குறும் புதினங்கள், 15 புதினங்கள், பயண நூல்கள் இரண்டு என தனது எழுத்துலக வரலாற்றை விரிவாக்கினார். இவர் நடத்திய கருத்தரங்கில் தமிழகத்தில உள்ள பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டதை பெருமையாகக் குறிப்பிட்டார். லேனா தமிழ்வாணனால் சங்கப் பலகை என அழைக்கப்பட்ட இலக்கியவீதி இனியவன் ஒளிக்கதிர்கள், டெல்லி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் பாய்ந்து பரவியது என்று குறிப்பிட்டார். கம்பன் கழக செயலாளராக அருளாளர் ஆர்.எம்.வீ. அழைத்தபோது மனமுவந்து ஏற்று இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் பல பயனுள்ள செய்திகளை எடுத்துக் கூறினார். முன்னதாக அரிமா துரை. சுந்தரராசன் அனைவரையும் வரவேற்று பேசினார். வழக்கம்போல, முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தினார். பொருளாளர் “காயத்ரி” ரங்கராஜன் நன்றி கூறினார். நண்பகல் உணவுக்குப் பின் விழா நிறைவடைந்தது.
19.03.2017 – திருநாவுக்கரசர் தேவாரத்தில் பிற சமயம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 19.03.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 302-ஆவது மாதாந்திரக் கூட்டம் 19.03.2017 அன்று சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. முனைவர் இரா. நாராயணன் அவர்கள் எழுதிய “திருநாவுக்கரசர் தேவாரத்தில் பிற சமயம்” என்னும் நூல் செம்மொழி தமிழ் ஆய்வு மைய பதிவாளர் முனைவர் முகிலை இராஜபாண்டியன் அவர்களால் வெளியிடப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக வைணவத் துறை தலைவர் முனைவர் கலியன் சம்பத்து அவர்கள் முதல் படியைப் பெற்றுக் கொண்டார். முனைவர் முகிலை இராஜபாண்டியன் பேசுகையில், முனைவர் இரா. நாராயணன் அவர்கள் விடாமுயற்சி, கடினமான உழைப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு, தன்னை விட வயதில் சிறியவர் என்றாலும், தான் அவரது ஆசிரியராக இருந்து வழி நடத்தியதை குறிப்பிட்டார். இந்த நூல் அனைத்து சமயங்களின் கொள்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது என குறிப்பிட்டார். தனது அலுவலக பணியையும் ஒதுக்கி வைத்து தனது மாணவரின் நூல் வெளியீடு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். அவரது உரை அனைத்து உறுப்பினர்களையும் கவர்ந்தது. முனைவர் கலியன் சம்பத்து பேசுகையில் நூலைப் பற்றியும், அதன் ஆசிரியைப்பற்றியும் சிலாகித்துப் பேசினார். நூலின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசிய அவர் இது ஒரு சிறந்த ஆய்வு நூல் என்று கூறினார். தலைவர் புலவர் த. இராமலிங்கம் பேசுகையில் சைவம், வைணவம் ஆசிய சமயங்களின் கோட்பாடுகள் இரண்டையும் ஒப்பாய்வு செய்த ஒரு ஆய்வு நூலாக விளங்குவதாக குறிப்பிட்டார். நூலை ஆய்வு செய்த வேலம்மாள் குழுமத்தைச் சேர்ந்த பேரா. விஜயகுமார் நூலை முழுமையாக ஆய்வு செய்து, பல செய்திகளை தனக்கே உரிய பாணியில் அவையோருக்கு விளக்கினார். முன்னதாக அரிமா துரை. சுந்தரராசன் வவேற்புரை ஆற்றினார். இம்மாதம் பிறந்தநாள் காணும் உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். முதன் முறையாக சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட கம்பன் கழக செயலாளர் திரு. இலக்கிய வீதி இனியவன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இலக்கிய பீடம் நடத்திய விழாவில் சிறந்த சிறுகதைக்கான சிறப்புப் பரிசு பெற்ற அண்ணாநகர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் கவிஞர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு முனைவர் கலியன் சம்பத்து சால்வை அணிவித்துப் பாராட்டினார். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கினார். நன்றி கூறிய பொருளாளர் திரு. ரங்கராஜன், பிறந்த நாளையொட்டி சங்க வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கிய ஸ்ரீமதி வெங்கடாசலம், திருமதி பாரததேவி அவர்களுக்கும், திருவாளர்கள் வெ. செல்லப்பா, தி. ரங்கராஜன் ஆகியோருக்கும் நன்றி கூறினார். ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் முனைவர் நாராயணன் அனைவருக்கும் குறிப்பாக தனது குடும்பத்தாருக்கும், குறிப்பாக தனது மனைவி திருமதி நளினி அவர்களுக்கும் நன்றி கூறினார். கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 26.02.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 301-ஆவது மாதாந்திரக் கூட்டம் 26.02.2017 அன்று சங்கத் துணைத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்ற முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களும், திருவள்ளுவர் விருது பெற்ற புலவர் பா. வீரமணி அவர்களும் கலந்து கொண்டனர். அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் இவர்கள் பாராட்டப்பட்டனர். தலைமை உரை ஆற்றிய புலவர் இராமலிங்கம் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதைக் குறித்து பேசுகையில், தமிழ் மொழி எவ்வாறு சீரழிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டி நம்மைப் போன்ற தமிழ் அமைப்புகள் தான் தமிழ் மொழி வளர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு கருத்துக்களை கூறிய அவர் நாம் அனைவரும் வீட்டிலும் வெளியேயும் கடை பிடிக்கப்பட வேண்டிய குறிப்புகளையும் கூறினார். உலகத்தாய் மொழி நாள் என்னும் தலைப்பில், உலகத்தில் உள்ள பல நாடுகள் எவ்வாறு தங்கள் தாய்மொழியை வளர்க்கின்றனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டினார். மற்ற நாடுகள் கொடுக்கும் முக்கியத்தைக் கூட, நமது நாடு தரவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அண்டை நாடான மலேசியா தமிழை ஆட்சி மொழி ஆக்கியுள்ளது என்று கூறினார். உலகத்தாய் மொழி நாள் எப்பொழுது இருந்து கொண்டாடப்படுகின்றது என்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவையோரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அனைவரையும் வியக்க வைத்தது. வாழ்த்துரை வழங்கிய புலவர் வீரமணி அவர்கள் சாதாரண குடியில் தோன்றிய தன்னை துறைமுகப் பொறுப்பு கழகத்தில் பணியாற்றிய தன்னை இந்த அளவு உயர்த்திய பெருமை தன் அலுவலகத்துக்கும் நண்பர்களுக்குமே பொருந்தும் என்று கூறினார். தாய்மொழியைப் பற்றிப் பேசுகையில் பல்வேறு சம்பவங்களை கூறினார். அயோத்திதாசர் என்று இன்று அழைக்கப்படும் அறிஞரின் இயற்பெயர் காத்தவராயன் என்பதை நினைவு கூர்ந்தார். தம்மை அழைத்துப் பெருமைப்படுத்தியது குறித்து அண்ணாநகர்த் தமிழ்ச்ங்கத்திற்கு நன்றி கூறினார். முன்னதாக செயலாளர் அண்மையில் மறைந்த தமிழறிஞர்கள் டாக்டர் ச.வே. சுப்பிரமணியம், டாக்டர் மணவை முஸ்தபா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தார். அவையோர் அனைவரும் எழுந்து நின்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சியை நடத்தினார். பொருளாளர் திரு. ரங்கராஜன் நன்றி கூறகையில், தன் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
29.1.17 – “திருவள்ளுவர் திருநாள் – தமிழர் திருநாள் “
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 29.01.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 300-ஆவது மாதாந்திரக் கூட்டம் 29.01.2017 அன்று சங்கத் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு. வெ.சேகர் அவர்கள் “திருவள்ளுவர் திருநாள் – தமிழர் திருநாள்” என்னும் தலைப்பில் சிறந்ததொரு உரையாற்றினார். தமிழர் திருநாள் எவ்வாறு கொண்டாட வேண்டும் என அறிஞர்கள் கூடி முடிவு செய்ததை நினைவு கூர்ந்தார். தமிழ் ஆண்டுகள் எவ்வாறு பயன்பாட்டுக்கு வந்தது என்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறினார். திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த பல புலவர்கள் குறித்தும், அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார். அனைவரும் வியக்கத்தக்க வகையில் பல்வேறு நூல்களில் இருந்து குறிப்புகள் தந்ததை அவையோரின் பாராட்டுக்களையும் பெற்றார். துணைத் தலைவர் தனது முன்னுரையில் சிறப்பு விருந்தினரின் சிறப்பியல்களை எடுத்தியம்பினார். தமிழர்களின் விழாக்களான இரு விழாக்களைப் பற்றி தெளிவான தகவல்களை கூறினார். முன்னதாக செயலாளர் வரவேற்புரையாற்றினார். முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் உறுப்பினர்களுக்கு வினா விடை நிகழ்ச்சியினை வழக்கம்போல் நடத்தினார். பின்னர், செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.