23-06-2019-அன்று நடைபெற்ற 329-வது கூட்டம்

23-06-2019-அன்று நடைபெற்ற 329-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.06.2019 அன்று பேரூர் தமிழ் மன்றம் வழங்கிய
“கவியரங்கம்” நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 329-ஆவது கூட்டம், தலைவர் தமிழ்ப்பணிச்
செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 23.06.2019 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை, பேரூர் தமிழ் மன்றம் வழங்கிய “கவியரங்கம் நடைபெற்றது.
கவியரங்கத் தலைவராக பேரூர் தமிழ் மன்றத்தைச் சார்ந்த செந்தமிழ்ச் சுடர் கவிஞர்
அருள்வேல் அவர்கள், மிகச் சிறப்பாக கவியரங்கத்தை நெறிப்படுத்தி வழங்கினார்.
கவியரங்கத்தில் கவிபாடிய கவிதாயினிகள் நந்தினி, கலைநிலா, ஜெயந்தி,
ஞானவடிவு, உமாதேவி, இந்துராணி ஆகியோரும் கவிஞர்கள் அர்ஜூன், பாக்கியராஜ்,
ஜெய்சிவா, ஜீவானந்தம், நிருபன்குமார் ஆகியோரும் தங்கள் எடுத்துக் கொண்ட
தலைப்பினையொட்டி சிறப்பாக கவிதைபாடி அவையோரை கவர்ந்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேரா. முனைவர் மறைமலை இலக்குவனார்
அவர்கள் கவிஞர்களை வெகுவாக பாராட்டினார். தற்காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு
அடுத்து, தமிழ்மொழியை வளர்ப்பதில் கவிஞர்களுக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளதை
சுட்டிக்காட்டினார். கோவையில் இருந்து வந்துள்ள இக் கவிஞர்கள் தனக்கு நெருங்கிய
நண்பர்கள் எனக் கூறி மிகவும் சிறப்பானவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் பேசுகையில், பேரூர் தமிழ் மன்றத்
தலைவர் தவத்திரு அ. இராமசாமி அடிகளார் அவர்களுக்கு நன்றி கூறினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த விரும்பி அவர்களுக்கு
நன்றி கூறினார்.
இது போன்ற நிகழ்ச்சிகளை நமது சங்கம் தொடர்ந்து நடத்தும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர் அரிமா துரை. சுந்ததராஜுலு,
அண்மையில் மறைந்த நமது சங்கத் துணைத்தலைவர் இ. தர்மன், நமது சங்கப்புரவலர்
திரு. டி.ஆர். இராசு அவர்களின் மகன் திருகுமார், சங்கத்தின்பால் பற்று கொண்ட
மருத்துவர் வி.டி. பலராமன், மதுரைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர்
இரா. மோகன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஜூன் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.

பின்னர் பேரூர் தமிழ் மன்றத் தலைவர் அடிகளார் விருப்பப்படி, அதன் செயலாளர்
கவிஞர் இரவி அவர்கள், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர். த. இராமலிங்கம்
அவர்களுக்கும், செயலாளர் அவர்களுக்கும் அடிகளார் சார்பில் பொன்னாடையும்,
நூல்களையும் வழங்கினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் கவியரங்கத்தில் கலந்து கொண்ட விருந்தளித்த
அனைவருக்கும் பொன்னடை, நினைவுப்பரிசு, நூல்கள் பரிசாக அளிக்கப்பட்டது.
தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் து.சீ. இராமலிங்கம் நன்றி கூறினார். அனைவரும்
குழுப்படம் எடுததுக் கொண்டனர்.
திருமதி பாரததேவி, திருமதி ஸ்ரீமதி வெங்கடாசலம் அளித்த நண்பகல் உணவிற்குப்
பின் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.