20.04.2017 – இலக்கிய வீதி




அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.04.2017 அன்று நடைபெற்றக் கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 304-ஆவது மாதாந்திரக் கூட்டம்
20.04.2017 அன்று அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தன் சார்பில் மூத்த
எழுத்தாளரும், சென்னை கம்பன் கழக செயலாளருமான “இலக்கிய வீதி”
இனியவன் அவர்களுடைய “பவழவிழா”வாக சங்கத் தலைவர் புலவர் த.
இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக
முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், இனியவன் அவர்களது இலக்கிய வீதி,
பத்திரிகையை தொடங்கி வைத்ததே தான் என்றும் அவர் நடத்திய
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தான் கலந்து கொண்டதை குறிப்பிட்டார்.
அவரது பல்வேறு பண்புகளை குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.
தலைவர் பேசுகையில் இனியவன் அவர்கள் தனக்கு முக்கியத்துவம்
தராமல் தமிழுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தனக்கென வாழாமல்
பிறருக்காக வாழும் தன்மை உடையவர் என்று பெருமைபட கூறினார்.
வாழ்த்துரை வழங்கிய “புதுகைத் தென்றல்” ஆசிரியர் புதுகை தருமராசன்
அவர்கள் பேசும் போது இனியவனுக்கும் தனக்கும் உள்ள நீண்ட கால
நட்பைக் குறித்து குறிப்பிட்டார். இலக்கியவீதி தொடங்கியபோது அவர்
சந்தித்த பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டார். இனியவன் அவர்கள்
அமைதி, அடக்கம் முதலிய பண்புகளை குறித்து தெளிவாக
எடுத்துரைத்தார்.
முனைவர் மறைமலை இலக்குவனார் தமது வாழ்த்துரையில்,
இனியவன்-கசலட்சுமி இவர்களின் பவழவிழா, பாண்டியன் காலத்தில
கபிலர் தலைமையில், ஓரி பாராட்ட நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
இனியவன் குறித்து குறிப்பிடுகையில் அவர் நமது 9-ஆவது வகுப்பில்
படிக்கும்போதே, மாணவர் குரல் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்
பரிசு பெற்றார். இலக்குமிபதி என்னும் பெயர் இனியவன் என்று மாறியது.
பள்ளியிறுதி படிக்கையில் “பெண்மனம்” கதைக்கு முதற்பரிசு. குமுதம்,
ஆனந்த விகடன் வாசகர்கள் இவரது கதைகளை விரும்பி படித்தனர்.
1959-இல் தொடங்கி 1972-இல் 14 ஆண்டுகளில் 250 கதைகள், 17
குறும் புதினங்கள், 15 புதினங்கள், பயண நூல்கள் இரண்டு என தனது
எழுத்துலக வரலாற்றை விரிவாக்கினார். இவர் நடத்திய கருத்தரங்கில்
தமிழகத்தில உள்ள பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டதை
பெருமையாகக் குறிப்பிட்டார். லேனா தமிழ்வாணனால் சங்கப் பலகை
என அழைக்கப்பட்ட இலக்கியவீதி இனியவன் ஒளிக்கதிர்கள், டெல்லி,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் பாய்ந்து பரவியது என்று
குறிப்பிட்டார்.
கம்பன் கழக செயலாளராக அருளாளர் ஆர்.எம்.வீ. அழைத்தபோது
மனமுவந்து ஏற்று இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும்
பல பயனுள்ள செய்திகளை எடுத்துக் கூறினார்.
முன்னதாக அரிமா துரை. சுந்தரராசன் அனைவரையும் வரவேற்று
பேசினார். வழக்கம்போல, முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள்
வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தினார். பொருளாளர் “காயத்ரி” ரங்கராஜன்
நன்றி கூறினார். நண்பகல் உணவுக்குப் பின் விழா நிறைவடைந்தது.





