

07-02-2021-அன்று நடைபெற்ற 345-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
07.02.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 345-வது கூட்டம் இணைய வழி மூலம் 07.02.2021-
ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச்
செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர்
திரு. துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக் கூட்டத்தின்
ஒருங்கிணைப்பாளராக அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் திகழ்ந்தார்.
சொற்பொழிவாளர் திருமதி ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் பைந்தமிழ் ஆசான்
கா. நமச்சிவாயர் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
20.02.1876-ஆம் ஆண்டு பிறந்த காவேரிப்பாக்கம் நமச்சிவாயர் கல்வி கற்ற பின்னர்
தண்டையார்பேட்டையில் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து
மகாவித்வான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மேலும் கல்விப் பயின்றார்.
செயின்ட் சேவியர் உயர் நிலைப்பள்ளி, நார்விக் மகளிர் பள்ளி, சிங்கலர் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார்.
தமிழ்க்கழகத்தின் தலைமைத் தேர்வாளராகவும், தமிழ்க் கல்வி சங்க உறுப்பினராகவும்,
பின்னர் அதன் தலைவராகவும் 1934 வரை பதவியில் தொடர்ந்து நீடித்தார். தமிழ்ப்பாட
நூல்களை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எழுதினார். தமிழ் வித்வான் தேர்வு
முறையை அறிமுகம் செய்து அதில் தேர்ச்சி பெறுவோர் பட்டம் பெறுவர் என அறிவித்தார்.
அறிவியில் நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தார்.
1934-ல் தமிழர் திருநாளை தமிழ் ஆசிரியர்களைச் சிறப்பித்துக் கொண்டாடினார்.
பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன், நாடக மஞ்சரி என 10 நாடகங்களை
அரேங்கேற்றினார். தமிழ்ச் சிற்றிலக்கணம், ஆத்திச்சூடி, தொல்காப்பியம்,
இளம்பூரணர், உரையுடன் வெளியிட்டதோடு தணிகைப்புராணம், தஞ்சை வாணன்
கோவை, இறையனார் களவியல் ஆகியவற்றைத் திருத்திய பதிப்பாக வெளியிட்டார்.
1936-ல் பொங்கல் அன்று திருவள்ளுவர் திருநாள் கழகத்தைத் தோற்றுவித்தார்.
தமிழ்க் கடல் என்ற பெயரில் அச்சகம் நடத்தி கவிதைகள் வெளியிட்டார். 1936-ஆம்
ஆண்டு மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழக நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார்.
இதை தொடர்ந்து மரு. ஜி. பவித்ரா அவர்கள் அறிவோம் ஆயுர்வேதம் என்னும்
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.மரு. ஜி. பவித்ரா அவர்கள் ஆயுர் என்றால் வாழ்க்கை. வேதம் என்றால் அறிவு.
வாழ்க்கையைப் பற்றிய அறிவு தான் ஆயுர்வேதம். வெறும் நோய்களை தீர்க்கும்
மருத்துவ முறையான மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான
வாழ்க்கை முறைகளையும் எடுத்துரைக்கிறது. நோயை குணப்படுத்துவது மட்டுமின்றி மீண்டும் நோய் வராமல் தடுத்து ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியம் என்றால் உடம்பில் உள்ள மூன்று தோஷங்கள், ஏழு தாதுக்கள், ஜீரண சக்தி, மனதின் வேலைப்பாடுகள் இவற்றின் சமநிலையே ஆரோக்கியம்.
இந்த சமநிலை குலையாதிருக்கும் பொருட்டு தினசரி கடைபிடிக்க வேண்டிய
வழிமுறைகளையும், பருவக்காலங்களுக்கு ஏற்ப கடைபிடிக்க வேண்டிய
வழிமுறைகளையும், தினச்சர்ய, ருதுச்சர்ய என்றப் பெயரில்
ஆயுர்வேதம் விளக்குகிறது. ஆயுர்வேதத்தில் நோய் தனி மனிதன் தனி எனப் பிரிக்காமல் மனதினை ஒரு முழுமையான ஒன்றாகக் கருதி உடல், மனம், தோஷங்கள், நோயின்
அறிகுறிகள் என அனைத்தையும் கருத்தில்க் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதர்வண வேதத்தில் இருந்து உப வேதமாக வந்த ஆயுர்வேதம், மோட்சம்
அடைவதற்கான கருவியாகத்தான் கருதப்படுகிறது. சீரான ஆரோக்கியமான
வாழ்வுக்கான முழுத் தீர்வாகவும் அமைகிறது.
இறுதியாக நன்றி உரை ஆற்றிய பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம், அரிமா த.கு.
திவாகரன் அவர்கள் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க கூட்டம் இணையவழி காணொலிக்
காட்சி மூலம் நடப்பதற்கு எடுத்துவரும் சீரிய முயற்சிகளையும் ஆற்றிவரும்
சேவைகளையும் பாராட்டிப் பேசினார். பின்னர் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
