

23-08-2020-அன்று நடைபெற்ற 339-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.08.2020 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 339-ஆவது கூட்டம் இணைய வழி
மூலம் 23.08.2020-ஆம் நாளன்று தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச்
செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்ட சொல்வளச் செம்மல் திரு. கந்திலி
கரிகாலன் அவர்கள் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்னும் தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்.
பாரதிதாசன் எந்த அளவிற்கு மக்களினடையே தமிழ் உணர்வை
போற்றினார் என்பதையும், மகாகவி பாரதியார் தமிழின் சிறப்பையும்,
மொழியின் வளத்தையும் தம் பாடல்களின் மூலம் உணர்த்தியவர்
என்பதையும் கூறினார். தமிழ் மொழி அதன் முக்கியத்துவத்தை இழக்கும்
நிலைக்கு வந்தபோது தமிழகமே வெகுண்டு எழுந்து பலர் தம் இன்னுயிரை
மாய்த்து கொண்டதை சுட்டிக் காட்டினார். நந்திக் கலம்பகம், தேம்பாவனி
போன்ற இலக்கியங்களில் இருந்து பாடல்களை மேற்கோள் காட்டி
அவையோரைத் தன்வயப்படுத்தினார்.
தொடக்க உரையாற்றிய அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள்,
தமிழின் மேன்மையைக் கூறி, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
தலைவர் பேசுகையில் கடந்த ஆறுமாதங்களுக்குப் பிறகு
உறுப்பினர்களின் முகத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதை
கூட்டிக்காட்டியும் சிறப்பு விருந்தினர் சிறப்பாகப் பேசியதையும் பாராட்டி
பேசினார்.
தமிழை நம் போன்ற அமைப்புகள்தான் மக்களுக்குக் கொண்டு செல்ல
வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய செயலாளர் அண்மையில்
நம்மைவிட்டுப் பிரிந்த மாண்புமிகு பேராசிரியர், அன்புப்பழம் நீ, திருமதி
ஜெயஸ்ரீ ராஜசேகரன், மு.பி. பாலசுப்பிரமணியம், தமிழறிஞர் கோ.
சாரங்கபாணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் பிறந்த நாள் காணும் உறுப்பினர்களுக்குப் பிறந்த நாள்
வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த இணையவழிக் கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து,
கூட்டத்தை சிறப்பாக அமைத்து கொடுத்த முனைவர் த.கு. திவாகரன்
அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
துபாய், ஆஸ்த்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும்
தமிழர்கள் தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட குடியாத்தம் குமணன், சொ. பத்மநாபன்,
புலவர் சோ. கருப்பசாமி, து.சீ. இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினார்கள். புதிய உறுப்பினர் ஜோதிமணி தன்னை அறிமுகப்படுத்தி,
வாழ்த்து தெரிவித்தார்.
நிறைவாக பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வந்திருந்த
அனவைருக்கும் நன்றிகூற இணையவழிக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
