19-08-2018-அன்று நடைபெற்ற 319-வது கூட்டம்



அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.08.2018 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 319-ஆவது கூட்டம் 19.08.2018 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, வில்லிவாக்கம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி
முதுகலைத் தமிழாசிரியாகப் பணியாற்றி வரும் கவிஞர் முனைவர்
கண்மணிபிரியா அவர்கள் “விடுதலை வேட்கையில் தமிழ்க் கவிஞர்களின்
பங்களிப்பு” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தொடக்கத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், முன்னாள் நாடாளுமன்ற
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்
மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அமுதா மெட்ரிக் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி வினோதினி சுதந்திர தின
சொற்பொழிவு ஆற்றினார். வில்லிவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி 11-ஆம்
வகுப்பு மாணவி எஸ். யோகபிரியா சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள 99
பூக்களின் பெயர்களை தனது நினைவாற்றல் மூலம் அவைக்கு எடுத்துரைத்தார்.
இந்த மாணவிகளுக்கு துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் நூல்கள்
பரிசளித்தார்.
தலைவர் பேசுகையில், பாரதியின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர் நாட்டு
விடுதலைக்குப் போராடியதையும், தேசிய ஒற்றுமைக்குப் பாடுபட்டதையும்
தெளிவாகக் கூறினார். நாட்டு விடுதலைக்கு திரு.வி.க.வின் பங்களிப்பு
அளப்பரியது என்றார்.
சிறப்பு சொற்பொழிவாளர் முனைவர் கண்மணிபிரியா பேசுகையில்
பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி, அரவிந்தர்,வா.வே.சு. அய்யர், நாமக்கல்
கவிஞர் போன்றவர்கள் நாடு விடுதலை பெறவேண்டும் என எவ்வாறு
பாடுபட்டார்கள் என்பதை விரிவாகவும், விளக்கமாகவும் ஒரு மணி நேரம் பேசி
அவையோரைத் தன்வயப்படுத்தினார். இவர்களைத் தவிர திரைத் துறையைச்
சார்ந்தவர்களும் விடுதலைக்குப் பாடுபட்டதையும், குறிப்பாக மதுரை பாஸ்கரதாஸ் 29 முறை சிறை தண்டனை பெற்றதை நினைவில் கொணர்ந்தார்.
தோழர் ஜீவா, எஸ்.டி. சுந்தரம் போன்ற கலைஞர்கள் குறித்து விரிவாக
எடுத்துரைத்தார்.
முன்னதாக, செயலாளர் அரிமாதுரை. சுந்தரராசன், வரவேற்புரை ஆற்றினார்.
ஆகஸ்ட் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பெற்றனர். சுதந்திர
நாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நடந்த விழாவில், மாவட்ட
ஆட்சித் தலைவர் அவர்கள் நமது உறுப்பினர் திரு. மோகனசுந்தரம்
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். சங்க உறுப்பினர்களும்
பாராட்டினார்கள்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா-விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்.
செயலாளர்
அரிமா துரை. சுந்தரராசன் நன்றி கூற கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.





