18-10-2015 பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 18.10.2015 அன்று நடைபெற்ற
பெரியார் – அண்ணா பிறந்த நாள், சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது பெற்ற
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுக்குப் பாராட்டு
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது பெற்ற பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சிகள் 18,10.2015 அன்று நடைபெற்றன. சங்கத் தலைவர் புலவர் த. இராமலிங்கம் தமது
தலைமை உரையில் பெரியார், அண்ணா ஆகியோரைப் பற்றி பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். முனைவர் மறைமலை இலக்குவனார் அவரகள் திரு. வா.மு. சேதுராமன் அவர்களைப் பற்றியும் தமிழ் மொழி வாழவும், வளர்ச்சியடையவும் எத்தகைய போராட்டங்களையும் சந்திக்கத் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டி
அவரைப் பாராட்ட தகுதி பெற்றளவர்கள் இருவர் என்றும் அதில் ஒருவர் முத்தமிழ்க் காவலர் சி.ஆ.பெ. விஸ்வநாதன், மற்றவர் மொழிப் போராளி இலக்குவனார் ஆகியோர் அவர்கள் இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லாததால் அவர்களது வாரிசுகளான மணிமேகலை கண்ணனும், மறைமலை இலக்குவனாரும் பாராட்டுவது சாலப் பொருத்தமானது என்று பலத்த கரவொலிக்கிடையே கூறியது அவையோரை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது அவரைத் தொடர்ந்து வா.மு.சே. அவர்களைப் பாராட்டிப் பேசிய முன்னாள் மேயர் சா. கணேசன் அவர்களும், த.கு. திவாகரன் அவர்களும் அவருடைய பன்முக குணங்களை எடுத்துக் காட்டி அவர் இந்த வயதிலும் ஏறத்தாழ 136 நாடுகள் பயணம் செய்து தமிழ்மொழியைப் பரப்பி வருவதையும் குறிப்பிட்டனர்.
பெங்களுருத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் திரு. முத்துச் செல்வன் பேசுகையில் கர்நாடகாவில் இத்தகைய மொழிப் பிரச்சினையில் கன்னட தமிழ்ச்சங்கத்தினர் தெரிவிக்கும் கருத்துக்களை கர்நாடக அரசு செவிமெடுத்துக் கேட்கும் என்றும் அந்த நிலை தமிழ்கத்தில் இல்லை என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் மேனாள் அமைச்சர் வேழவேந்தன் அவர்கள் பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் அறிய பல தகவல்களை அவையில் தெரிவித்தார். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை அண்ணா அவர்கள் தமிழ்நாடு என பெயர் மாற்றம், சட்டமன்றத்தில் வடமொழி சொற்களை நீக்கி தமிழ் சொற்களை அறிமுகம் செய்தது. சட்டமன்றத்தில் திருக்குறளை சொல்லி அவையை துவங்க
அப்போதைய பேரவைத் தலைவர் சி.பா. ஆதித்தனாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தியது போன்ற பல விவரங்களை தெரிவித்தார்.
ஏற்புரை வழங்கிய திரு. சேதுராமன் அவர்கள் தமிழை உலகெங்கும் பரப்புவது தனது தலையாய கடமை என்று கூறினார். தமிழனாக இருப்பவர் தமிழ் மொழியியைத் தவிர வேறு மொழியில் பேசுவதைக் கேட்டால் தமக்கு அளவற்ற கோபம் வருமென்றும் அவரை கண்டிப்பதோடு மட்டுமல்ல அடிக்கவும் செய்வேன் என்று
கூறியது, அவர் தமிழ் மீது கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்தியது. கவிதை சரளமாக எழுதும் ஆற்றலை
இறைவன் தமக்களித்துள்ளான் எனக் குறிப்பிட்ட அவர் தன் வாழ்நாளிலேயே தாம் துவங்கியுள்ள குடிலைக் கட்டி முடிப்பதே தமது குறிக்கோள் என்றும் அதற்கு திருவள்ளுவனைப் போன்ற தம்பிமார்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதும் என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
முன்னதாக செயலாளர் துரை. சுந்ததராசன் வரவேற்புரை ஆற்றினார் தமிழ் அமைப்புகளுக்கு வேறு
மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி அது போன்று தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நிறைவாக சங்கப் பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூற விழா நிறைவடைந்தது.
