15-07-2018 – அன்று நடைபெற்ற 318-வது கூட்டம்

15-07-2018 – அன்று நடைபெற்ற 318-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
15.07.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 318-ஆவது கூட்டம் 15.07.2018 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, தமிழ்ப்பணி ஆசிரியர், தமிழ்மாமணி வா.மு.சே.
திருவள்ளுவர் அவர்கள் “உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தமிழ்ப்பற்று”
என்னும் தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார்.
தலைவர் பேசுகையில், இன்று காமராசர் பிறந்தநாள் என்பதால் அவர் அவரது
கல்விப்பணி, கட்சிப்பணி, நிர்வாகத் திறமை ஆகியவை குறித்து சுருக்கமாக
பேசினார். அதே போல் மறைமலை அடிகள் பிறந்தநாள் குறித்தும் சில
கருத்துக்களைக் கூறினார். தனித்தமிழ் இயக்கம் கண்டவர் என்று கூறினார்.
தமிழ்மொழி மேல் உள்ள பற்றால் வேதாசலம் என்று பெற்றோர் இட்ட பெயரை,
மறைமலை என்று மாற்றிக்கொண்டார் எனக் கூறினார்.
தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் பேசுகையில், உலகின் பல
நாடுகளில் உள்ள தமிழர்களோடு தமக்குள்ள தொடர்பு குறித்து விரிவாகப்
பேசினார். மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், கனடா போன்ற பல நாடுகளுக்குச்
சென்று, அங்குள்ள மக்களுடன் தனக்குள்ள நெருக்கத்தை எடுத்துக் கூறினார்.
மலேசியாவில் 523 பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாக உள்ளதையும், அங்கு
சிறந்த தமிழ் இலக்கியத்துக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் டாலர்
பரிசளிக்கப்படுவதாகவும் கூறினார்.
மியான்மர் நாட்டில் கோவிந்தராஜப் பெருமாள் 5 கோடி ரூபாய் செலவில் ஒரு
தமிழர் கட்டியுள்ளார் என்றும், தட்டோண்ணப் பகுதியில் வள்ளுவர் கூட்டம்
உள்ளத்தையும் சுட்டிக் காட்டினார். கனடாவில் டொராண்டோ பகுதியில் அதிக
அளவில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருதாக கூறினார். குறிப்பாக உதயன்
பத்திரிகை இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறினார். தமிழ்க் கல்லூரியும்
உள்ளதாக கூறினார். தமிழ்மொழி ஆளுமை மொழியாக உள்ளதையும்
தெரிவித்தார். மொத்தத்தில் உறுப்பினர்கள் அனைவரையும் பல நாடுகளுக்கு
நேரில் அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய மரியாதை இல்லை என்று வருத்தத்தோடு
கூறினார்.
பாரிசில் உலக தமிழ் மாநாடு நடைபெற்றதை சுட்டிக்காட்டி, ஆண்டுதோறும்
கம்பர் விழா நடைபெறுவதை நினைவு கூர்ந்தார்.
முன்னதாக, காமராசர் பிறந்தநாளையொட்டி, அமுதா மெட்ரிக் பள்ளி 9-ஆம்
வகுப்பு மாணவி சுபஸ்ஸ்ரீ முருகன், 7-ஆம் வகுப்பு மாணவி ஹேமாவதி பிரபு
ஆகியோர் முறையே கவிதை மற்றும் சொற்பொழிவும் அளித்தனர்.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன், வரவேற்புரை ஆற்றினார். ஜூலை
மாதம் பிறந்த உறுப்பினர்கள் பாராட்டப்பெற்றனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா-விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்.
நிறைவாக, நன்கொடை அளித்தவர்களுக்கும், இனிப்பு வகைகள் வழங்கிய
திரு. கலியமூர்த்தி அவர்களுக்கும் செயலாளர் நன்றி கூறினார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.